தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தொடர்பாக விசாரணை அறிக்கையை கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்தது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இது தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து குஜராத்தை சேர்ந்த எஸ்.பி பிரவீன்குமார் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்ரெண்ட் முகேஷ் குமார், துணை போலீஸ் சூப்ரெண்ட் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 15-ம் தேதி கரூர் வந்தனர். சிறப்பு புலனாய்வுக்குழு ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக்குழுவினர் உச்சநீதிமன்ற உத்தரவுபடி வழக்கின் ஆவணங்கள் மற்றும் விசாரணை நிலை அறிக்கையை ஒப்படைத்தனர்.
இதன்பின் சிபிஐ விசாரணையை தொடக்கியது. 41 பேர் பலி கொண்ட வேலுச்சாமிபுரத்தில் சிபிஐ குழு விசாரணை நடத்தியது. தவெக தொண்டர்கள் மரத்தின்மீது ஏறியதில் மரக்கிளை முறிந்து விழுந்தது. இது தொடர்பாக வனத்துறையின் ஆவணங்களை பெற்று வனத்தறையினரிடம் சிபிஐ குழுவினர் விசாரணை நடத்தினர். தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் சென்ற சிபிஐ குழு நேற்று இரவு மீண்டும் கரூர் திரும்பியது. இந்த நிலையில், எஸ்.பி பிரவீன்குமார் தலைமையிலான சிபிஐ குழு, கடந்த எட்டு நாட்களாக விசாரணை மேற்கொண்ட அதற்கான அறிக்கையை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி பரத்குமார் முன் அறிக்கையை தாக்கல் செய்தனர்.
