சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி – தூத்துக்குடி மாவட்டங்கள் வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பல கொலைகளுக்கு மது தான் காரணமாக இருந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் தி.மு.க., அரசும், அதன் காவல்துறையும் படுதோல்வி அடைந்து விட்டன என்பதைத் தான் இந்த படுகொலைகள் காட்டுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பிரகதீஸ்வரன் என்ற இளைஞரும், அவரது கொலைக்கு பழிவாங்க கஸ்தூரி என்ற பெண்ணும் கொல்லப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவிரியில் மதுக்கடையில் மது வாங்குவதில் ஏற்பட்ட போட்டியில் விஜய் என்பவர் கொல்லப்பட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் அம்பலச்சேரியில் சுயம்புகனி, தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகில் உமா, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை அருகே ராஜசேகரன், கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையத்தில் அஸ்வினி, கடலூர் மாவட்டம் சின்ன கங்கணாங்குப்பத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் என மொத்தம் 8 பேர் ஒரே நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.