வைகாசி விசாகம் 2025 : எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்?

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் மிகச் சிறப்பான நாளாகும். குறிப்பாக முருக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் திருநாள் என்றே இதனை சொல்லலாம்.

முருகப் பெருமான் அவதரித்த நாளான வைகாசி விசாகத்தன்று எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும் என்பதை தெரிந்து கொண்டு, முறையாக விரதம் கடைபிடித்து முருகனின் அருளை பெறலாம்.

வைகாசி விசாகம் 2025 :

முருகப் பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தை வைகாசி விசாக பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். உலகம் முழுவதிலும் இருக்கும் முருக பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து பால் குடம் ஏந்தியும், காவடி ஏந்தியும் வந்து முருகப் பெருமானின் அருளை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழா ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த நாளில் எப்படி விரதம் இருந்தால் முருகனின் பரிபூரண அருளை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முருகன் திருஅவதாரம் :

சூரபத்மன் என்று அசுரனை வதம் செய்வதற்காக சிவ பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொரிகள் சரவண பொய்கையில் உள்ள ஆறு மலர்களில் விழுந்து, அவை ஆறு குழந்தைகளாக உருமாறின. கனலில் இருந்து தோன்றிய 6 குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் 6 பேரும் வளர்த்தனர். இதனால் அவர்களுக்கு கார்த்திகேயன் என்ற பெயர் ஏற்பட்டது. அன்னை பார்வதி தேவி அவர்கள் ஆறு பேரையும் இணைத்து ஒரே உருவமாக மாற்றினாள். இதனால் அவனுக்கு கந்தன் என்னும் திருநாமம் ஏற்பட்டது. அன்னையிடம் பெற்ற சக்தி வேல் தாங்கி, சூரபத்மனுடன் போரிட்டு, ஐப்பசி மாதத்தின் ஆறாவது நாளில் வதம் செய்தார். இதையே சூரசம்ஹாரம் என்றும், கந்த சஷ்டி விழா என்றும் போற்றுகின்றோம்.

வைகாசி விசாகம் விரத முறை :

முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய கந்தசஷ்டி விழா எப்படி சிறப்பு மிக்கதோ அதே போல், முருகப் பெருமான் பக்தர்களை காப்பதற்காக அவதரித்த தினமான வைகாசி விசாகமும் மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அபிஷேகம், அலங்காரம், பூஜை, விரதம் போன்றவை இந்த விழாவின் முக்கிய அம்சங்கள். மக்கள் அதிகாலையில் எழுந்து, முருகனின் உருவ படத்தை அல்லது விக்ரஹைத்தை அலங்கரித்து, சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு படைத்து, கந்த சஷ்டி கவசம், சுப்ரமணிய புஜங்கம், திருப்புகழ் போன்ற பாடல்களைப் பாடி முருகனை வழிபடுவார்கள். சிலர் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்வார்கள்.

பக்தர்கள் வழிபாடு :

பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று முருகனை வழிபடுவார்கள். பால் குடம், காவடி எடுத்து பாத யாத்திரையாக கோவிலுக்கு செல்வார்கள். சிலர் உடல் மற்றும் நாக்கில் வேல் குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். வைகாசி விசாகம் முருகனுக்கு மிகவும் முக்கியமான நாள். அன்று கோவில்களில் விசேஷ பூஜைகள் நடக்கும். அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, ஹோமம் போன்றவை நடைபெறும். பல கோவில்களில் பிரம்மோற்சவம் நடக்கும். இது 10 நாட்கள் நடக்கும் திருவிழா. அப்போது முருகனும், அவரது மனைவியரும் பெரிய தேரில் ஊர்வலமாக வருவார்கள். முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.

விரதம் இருக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

முடிந்தவர்கள் அன்று நாள் முழுவதும் உபவாசமாக இருந்து விரதத்தை கடைபிடிக்கலாம். முடியாதவர்கள், எளிமையாக பால், பழம் மட்டும் சாப்பிட்டோ அல்லது சைவமாக சாப்பிட்டோ விரதம் இருக்கலாம். முருகப் பெருமானுக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு. எந்த மந்திரமும் தெரியாதவர்கள், ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லலாம். வைகாசி விசாக பெருவிழா அன்று முடிந்த வரை இனிப்புக்களை தானம் செய்வது சிறப்பு. எறும்புகளுக்கு அரிசி அல்லது கோதுமை மாவுடன் வெல்லம் கலந்து கொடுக்கலாம். இதனால் முருகப் பெருமானின் மனம் மகிழ்ந்து, அவரது பரிபூரண அருளை நமக்கு தந்து அருள்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *