24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி 2025 எப்போது தெரியுமா?

ஏகாதசி விரதம் என்பது பெருமாளின் அருளை பெறுவதற்காகவும், பாவங்களில் இருந்து விடுபடுவதற்காக கடைபிடிக்கப்படும் விரதம் ஆகும். ஏகாதசி விரதம் புண்ணியம் தரும் விரதமாக கருதப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு முறை கடைபிடித்தால் கூட, ஒரு வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வருடத்திற்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருவத உண்டு. ஆனால் இந்த அனைத்து ஏகாதசி விரதங்களையும் அனைவராலும் கடைபிடிக்க முடியாது. எந்த மாதத்தில் ஏகாதசி விரதம் இருந்தாலும் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்கள் கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதம் இருந்தால் மட்டும் வருடம் முழுவதும் வரும் 24 ஏகாதசி விரதங்களையும் கடைபிடித்த பலன்கள் கிடைத்து விடும். அப்படி மகா புண்ணிய பலனை தரக் கூடியது தான் நிர்ஜல ஏகாதசி.

ஏகாதசிகளில் மிகவும் முக்கியமான ஏகாதசியாக கருதப்படுவது நிர்ஜல ஏகாதசி. இது இந்து மதத்தில் மிக முக்கியமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வேண்டி, பக்தர்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கடுமையான விரதத்தை மேற்கொள்கின்றனர். இந்த விரதம் மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது மற்ற 24 ஏகாதசிகளின் ஆன்மீக பலனைத் தருகிறது.

நிர்ஜல ஏகாதசி 2025 தேதி, நேரம் :

நிர்ஜலா என்றால் தண்ணீர் இல்லாமல் என்று பொருள். நிர்ஜலா ஏகாதசி விரதம் தண்ணீர் மற்றும் எந்த விதமான உணவும் இல்லாமல் அனுசரிக்கப்படுகிறது. நிர்ஜலா ஏகாதசி விரதம் கடுமையான விரத விதிகள் காரணமாக அனைத்து ஏகாதசி விரதங்களிலும் கடினமானதாக கருதப்படுகிறது. நிர்ஜலா ஏகாதசி, ஜேஷ்ட மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் ஏகாதசி திதியில் வருகிறது. 2025 ஆம் ஆண்டில், நிர்ஜலா ஏகாதசி ஜூன் 6, 2025 அன்று அனுசரிக்கப்படும். ஜூன் 6ம் தேதி அதிகாலை 04.53 மணிக்கு துவங்கி, ஜூன் 07ம் தேதி காலை 06.45 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி துவங்குகிறது.

இதனால் நிர்ஜலா ஏகாதசி விரதம் இருக்கும் பக்தர்கள் ஜூன் 06ம் தேதி முழுவதும் விரதம் கடைபிடித்து, ஜூன் 07ம் தேதி காலை 7 மணிக்கு பிறகு பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பாரணையை ஹரி வாஸரத்தின் போது செய்யக்கூடாது. விரதத்தை முடிப்பதற்கு முன்பு ஹரி வாஸரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஹரி வாஸரம் என்பது துவாதசி திதியின் முதல் கால் பகுதி நேரமாகும். விரதத்தை நிறைவு செய்த பிறகே பக்தர்கள் தண்ணீர் அருந்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *