பாகிஸ்தானில் மூன்று இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் தேசியவாத தலைவரும், முன்னாள் மாகாண முதல்வருமான சர்தார் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்நாளை நினைவூட்டும் வகையில் பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் பேரணி நடைபெற்றது. இதில் சர்தார் அதாவுல்லாவின் மகன் சர்தார் அக்தர் மெங்கல் கலந்து கொண்டார்.பேரணி முடிந்து மக்கள் வெளியேறும் போது வாகன நிறுத்தும் இடத்தில் இருநது குண்டு வெடித்தது. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
இதேபோல், பலுசிஸ்தானில் மற்றொரு இடத்தில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள். மேலும் 4 பேர் காயமடைந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு மாவட்டத்தில் உள்ள துணை ராணுவப்படை தலைமையகத்தைக் குறிவைத்து தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை ராணுவ தலைமையகத்தின் சுவரில் மோதி வெடிக்க வைத்தனர். இதில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஒரே நாளில் மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 25 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.