அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனநாயகப் போருக்கு முன்பாக மக்களைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன் என்று திருச்சியில் நடைபெற்ற பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இன்று முதல் தனது மாநிலம் தழுவிய பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து குவிந்திருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் மரக்கடை வந்தார்.
அங்கு இருந்த பிரசார வாகனத்தில் ஏறி தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது அவர் பேசுகையில், போருக்கு செல்வதற்கு முன் பெற்றி பெறுவதற்காக குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவர். ஒரு சில மண்ணைத் தொட்டால் நல்லது. இந்த மண்ணைத் தொட்டு தொடங்கினால் நல்லது என பெரியவர்கள் எல்லாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம்.
திருச்சியில் இருந்து தொடங்கிய எல்லாம் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள். மதச்சார்பின்மைக்கு பெயர்பெற்ற திருச்சி கொள்கைக்கான மண். கடந்த 1956-ம் ஆண்டு அறிஞர் அண்ணா, 1974-ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாநாடு என பல வரலாறுகளை கொண்டது திருச்சி.உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கனெக்ட், மனதில் ஒரு பரவசம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனநாயகப் போருக்கு முன்பாக மக்களைப் பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன் என்று பேசினார்.
