புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம் என்று தவெக தலைவர் விஜய்யை பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுக கூட்டணியை மட்டும் வைத்து பலமாக இருந்தால் போதுமா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? திமுக கூட்டணியை அகற்றுவோம். தமிழ்நாட்டில் உறுதியாக ஆட்சி மாற்றம் வரும். ஆட்சியை மாற்ற மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி இன்னும் வலுப்பெறும். திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும்.
தவெக தலைவர் விஜய் புதிதாக கட்சியை ஆரம்பித்து ஒரு பிரசாரத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏ கூட கிடையாது. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன்.புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம்” என்றார்.