தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடக்கு ஆந்திர தெற்கு ஒடிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும தெற்கு சத்திஸ்கர் பகுதிகளில் கரையை கடக்கிறது. இதனால், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையொட்டி திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.