கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் சிபிஐ விசாரணை முன்பு 4 பேர் இன்று ஆஜராகினர்.
கரூர் மாவட்டம் , வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் சம்பந்தமாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. அத்துடன் அக்டோபர் 18-ம் தேதி முதல் முதல் தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக சிபிஐ அலுவலகத்தில், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் அப்பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வரும் உரிமையாளர் என மொத்தம் நான்கு பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
		 
		 
		