இன்று புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பா என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மொந்தா புயலாக மாறியது. இது கடந்த 27-ம் தேதி ஆந்திராவில் கரையைக் கடந்து தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரா நோக்கி போனது. இதனால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் வரை தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி மூலம் இயல்பை விட கூடுதலாகவே மழை கிடைத்தது. வட மாவட்டங்களில் அதிக மழையை எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்துடன் கடந்து சென்றது.
இந்நிலையில் இன்று இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானது. வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு உருவானது. இது வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு-வட கிழக்கு நோக்கி, கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு ஜார்க்கண்ட் வழியாக பிஹாரை நோக்கி நகர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் படிப்படியாக பலவீனம் அடையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மெதுவாக வடக்கு- வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலையில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடலில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து பின்னர் படிப்படியாக பலவீனம் அடையும். புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை. மேலும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
		 
		 
		