பனையூரில் உள்ள அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்திற்கு தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக சார்பில் ஜி.கே.மணி உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய், பனையூர் அலுவலகத்தில் முத்துராமலிங்க தேவர் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், ‘விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்’ என்று கூறியுள்ளார்.
