தேவர் என்பது சாதியின் அடையாளமல்ல… கவிஞர் வைரமுத்து விளக்கம்!

தேவர் என்பது ஒரு சாதியின் அடையாளம் என்று யாரும் தனித்துப் பார்க்க வேண்டியதில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக தலைவர் வைகோ , முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,” கடந்த காலத்தில் பெருமைக்குரிய பெரியவர்களின் பெயர்களோடு ஒட்டியிருக்கும் பின்னொட்டு சாதிப்பெயர்கள் என்று கருதப்படக் கூடாது. அவை அந்தந்தக்காலப் புழக்கங்கள் அடையாளங்கள் மற்றும் ஆகுபெயர்கள். ஜி.டி.நாயுடுவை நாயுடு என்றே அழைக்கலாம், உ.வே.சாமிநாதய்யரை அய்யர் என்றே விளிக்கலாம்.

வ.உ.சிதம்பரம்பிள்ளையைப் பிள்ளை என்றே வழங்கலாம். இவற்றுள் எதுவும் அவர்களின் சாதி அபிமானத்தின் சாட்சி அல்ல. அதைச் சாதிக்கு மட்டுமான பெருமிதமாகக் கருதுவதுதான் சமூகப் பிழை. அப்படித்தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பட்டப் பெயரும். இவை யாவும் அவரவர் காலத்துக் குறியீடுகளே அவற்றை அழிப்பதற்கு நமக்கென்ன உரிமை? நானோ என் மகன்களோ சாதிப்பெயர்களை இட்டுக்கொள்ள மாட்டோம்.

என் பாட்டன்களோஎன் தந்தையோ இட்டுக்கொண்டதை நாங்கள் எப்படித் தடுக்க முடியும் அல்லது அழிக்க முடியும்? சாதிக்கு முன் சாதிக்குப் பின் என்று இரண்டு காலங்கள் உண்டென்று வரலாறு வகிர்ந்து சொல்லட்டும். ஆதலால், ஓங்கிச் சொல்லலாம். தேவர் திருமகன் வாழ்க; தேவர் திருப்பெயர் வாழ்க; தேவர் தியாகங்கள் வாழ்க” என்று பதிவிட்டுள்ளார். தெரு, கட்டிடங்களில் உள்ள பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்ட நிலையில் கவிஞர் வைரமுத்துவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *