அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்தினார். இதையடுத்து செங்கோட்டையனை அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். ஆனால், செங்கோட்டையன் கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மதுரையிலிருந்து தேவர் ஜெயந்தியின் பங்கேற்க பசும்பொன் நோக்கி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பயணம் செய்தனர். இவர்கள் இருவரும் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக ஒரே வாகனத்தில் சென்றது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
		 
		 
		