தேசப்பிதாவை கொன்றழித்தவர்களின் விழாவில் பிரதமர் மோடி- மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் தலை, நாணயத்தை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ஆர்எஸ்எஸ் இன்று(அக்டோபர் 2) நூறாண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டுக்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உரையாற்றினார். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு..க ஸ்டாலின் அவரது எக்ஸ் பதிவில், “நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள். மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும் சக்திகள் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு என்றும் வழங்கும் ஆற்றல் அவர். நம் தேசப்பிதாவைக் கொன்றொழித்த மதவாதியின் கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும், நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *