கரூரில் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்துள்ளது, அரசியல் விளையாட்டு என்றும் அதனை காங்கிரஸ் கட்சியினர் முறியடிக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கரூர் சம்பவம்:-
கடந்த சனிக்கிழமை அன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரம் தான் விஜய் அரசியலில் கருப்பு புள்ளியாக அமைந்துள்ளது. பிரச்சாரத்தின் போது மக்கள் ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கலும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.
சம்பவம் நடைபெற்ற நாள்முதல் இது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தை ஆய்வு செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDI) சார்பில் 8 பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் குழு
இந்த குழுவில் பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, ஷிண்டே பிரிவு சிவ சேனாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது அரசியல் விளையாட்டு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்திருமாவளவன், கரூர் சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறியும் குழுவை பாஜக கட்சி அமைத்துள்ளது அரசியல் விளையாட்டு என்றும் அரசியல் உள்நோக்கம் காரணமாக பாஜக இதை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
