ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.42.45 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் தொல்காப்பிய பூங்கா உருவாக்கப்பட்டது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் 58 ஏக்கர் பரப்பினைக் கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, தொல்காப்பியப் பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவை 22.01.2011 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன் பின் முறையான பராமரிப்பில்லாமல் இந்த பூங்கா பொலிவிழந்தது.

இதையடுத்து பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகளுடன் மறுமேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி ஜூலை 2021-ம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையினால் ‘தொல்காப்பியப் பூங்கா மறு மேம்பாட்டு’ பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் தொல்காப்பியப் பூங்காவின் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கியது. அதன்பின்னர் தொல்காப்பியப் பூங்காவின் மறு மேம்பாட்டு பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொள்ள ஆரம்பித்தது.

அதன்படி நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது, பள்ளி சிறுவர்களுடன் இணைந்து பூங்காவை அவர் சுற்றிப் பார்த்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *