வங்கக்கடலில் அக்டோபர் 27-ம் தேதி மொந்தா புயல் உருவாக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட போதிலும், பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. மேற்கு- மத்திய வங்கக்கடலில் அந்த மேலடுக்கு சுழற்சி இன்று அதிகாலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து உருவான இரண்டாவது காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்கிறது.
இன்று உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும். மத்திய வங்க கடலில் வரும் அக்டோபர் 26-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அதேசமயம் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் அக்டோபர் 27-ம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெற உள்ளது என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு மொந்தா என்ற பெயரை தாய்லாந்து பரிந்துரைத்துள்ளது.
வங்க கடலில் உருவாக வாய்ப்பு உள்ள இந்த புழல் ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 27-ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திருவள்ளூர், ராணிப்பட்டை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
