வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27- ம் தேதி புயலாக உருவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் புயலாகவும் வலுவடையக்கூடும். அதேபோல், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
இதன் காரணமாக, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மொந்தா என தாய்லாந்து பெயர் சூட்டியுள்ளது. மொந்தா என்றால் தாய்லாந்து மொழியில் அழகான மலர் என்று பெயர்.
