வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “விடுதலை வீரர்களின் நினைவைப் போற்றுவதைத் தலையாய கடமையாகக் கருதும் நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகம், 2023-ம் ஆண்டு டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பு ஊர்தியில் வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவச்சிலை எனத் தொடர்ந்து அவரது புகழ்பாடி வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய முதல் பெண் போராளி ஆங்கிலேயர்களை வெற்றி கொண்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவச் சிலையை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்தேன். இந்த மகிழ்ச்சிமிகு நாளில், வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பெயர் சூட்டப்படும் எனப் பெருமிதத்துடன் அறிவிக்கிறேன். மண் – மானம் காக்கப் புயலெனப் புறப்பட்ட வீரத்தாய் வேலுநாச்சியாரின் வரலாறும் – அவருக்குத் துணை நின்ற மருது சகோதரர்கள் உள்ளிட்ட தீரமிக்க தமிழர்களின் வரலாறும், இந்த மண் யாருக்கும் தலைகுனியாது எனும் வரலாற்றை உரக்கச் சொல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.