மதுரையைச் சேர்த்து நடிகர் சங்கர் என்கிற ரோபோ சங்கர் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
கிட்டத்தட்ட 100 படங்கள் வரை நடித்த நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என ஏராளமான வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
யார் இந்த ரோபோ சங்கர்..?
மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் ரோபோ சங்கர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பிரபல பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ஞானசம்பந்தன் ஐயாவின் மாணவர் தான் ரோபோ சங்கர். படிக்கும்போது மேடையில் ஏறி பேசுவது மட்டுமல்லாமல், “நடிகர்கள் அர்ஜுன், விஜயகாந்த், கமல் மாதிரியான பாடி லாங்குவேஜ், அதாவது அவர்களை போல நடிப்பது, நடனம் ஆடுவது, மிமிக்கிரி என அப்போதே ஒரு கலைஞராக உருவெடுத்துள்ளார். அதன்பிறகு கோவில் திருவிழா போன்ற விழாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மக்களை ரசிக்க வைப்பது என தன் திறமைகளை வளர்த்து கொண்டார்.
சென்னையில் அசத்திய ரோபோ சங்கர்:-
சில நண்பர்களின் உதவியால் சென்னைக்கு சென்று அங்கு பல நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார் நடிகர் ரோபோ சங்கர். விஜய் டிவியின் “கலக்கப்போவது”, சன் டிவியின் “அசத்தப்போவது யாரு” ராஜ் டிவிவின் “காமெடி மன்னர்கள்” என தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு அசத்தி உள்ளார்.
சினிமாவும்; டிவி நிகழ்ச்சிகளும்..,
1997ஆம் ஆண்டு விஜயகாந்தின் “தர்ம சக்கரம்” என்ற படத்தில் மிகச்சிறிய பாத்திரத்தில் தோன்றிய ரோபோ சங்கர், அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு வெளியான ரவி மோகனின் “தீபாவளி” படத்தில் கதாநாயகனின் நண்பராக நடித்து ரோபோ சங்கர கவனம் பெற்றார். இருப்பினும், அதன்பிறகு சங்கர், டிவி நிகழ்ச்சிகள் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். “வாயை மூடி பேசவும், மாரி, சிங்கம்-3, வேலையினு வந்துட்டா வெள்ளக்காரன், சிங்கப்பூர் சலூன், இரும்புத்திரை” என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் சிறந்த காமெடி நடிகராக உருவானார்.
சங்கர் டூ ரோபோ சங்கர்?
ஆரம்ப காலகட்டத்தில் மேடைகளில், உடல் முழுவதும் ஸ்டீல் பெயிண்டை பூசிக்கொண்டு மேடைகளில் ரோபோ போல நடித்து காட்டுவது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். வெறும் ரூ.300 வருமானத்திற்காக. அந்த ஸ்டீல் பெயிண்ட் தான் அவருக்கு எமனாக மாறியது. பெயிண்டை எடுக்க உடல் முழுவதும் மண்ணெண்ணை தேய்த்து தான் அகற்ற வேண்டும். அதனால் உடலில் எனாமல் தேய்மானம் ஆனது. அதனால் ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை நோயும் வந்தது. அதனால் பெரியளவில் உடல் பாதிப்பை எதிர்க் கொண்டார் சங்கர். இதுதான் அவரை மரணம் வரை அழைத்து சென்றதாக நடிகர் இளவரசு சொல்கிறார்.
கமலின் தீவிர ரசிகரான ரோபோ சங்கர், சாதிக்க துடிக்கும் பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து மறைந்துள்ளார். “மிஸ்டர் மதுரை, மிஸ்டர் தமிழ்நாடு” போன்ற பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார்.