சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி சாலைக்கு ஜெய்சங்கர் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெய்சங்கர்.1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்சங்கர், 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகன், குணச்சித்திரம், வில்லன், நகைச்சுவை என அத்தனை கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை நாயகர் என்று அழைக்கப்பட்டார். இவரது படங்கள் வாரம் ஒன்றென வந்த காரணத்தால் இவர் அப்படி அழைக்கப்பட்டார். கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி தனது 62 வயதில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஜெய்சங்கர் கலைமாமணி விருது பெற்றவராவார்.
சென்னையில் உள்ள கல்லூரி சாலைக்கு தனது தந்தை ஜெய்சங்கரின் பெயர் சூட்ட வேண்டும் என அவரது மகன் விஜயசங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி சாலையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.