துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கடத்தியதாக நடிகை ரன்யா ராவிற்கு 102 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்மகளூரை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ்(32). கர்நாடகா காவல்துறை டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகளான ரன்யா ராவ் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு நடித்த வாகா படத்தில் கதாநாயகியாக நடித்த ரன்யா ராவ், துபாயில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு மார்ச் 3-ம் தேதி வந்தார். அப்போது அவர் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது துபாயில் இருந்து அவர் பலமுறை பெல்ட், பை, உடைகளில் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், பெங்களூருவில் உள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.3 கோடி பணம் மற்றும் ரூ.17 கோடி மதிப்பிலான சொத்துக்களின் ஆவணங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், நடிகை ரன்யா ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கக்கடத்தல் வழக்கில் பணமுறைகேடும் நடைபெற்று இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில், அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் நடிகை ரன்யா ராவ், பலமுறை மனுத்தாக்கல் செய்தார். ஆனால், வருவாய் புலனாய்வு இயக்குனரகம் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தவறியதால், ரன்யா ராவ் மற்றும் தருணுக்கு நிபந்தனையுடன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. ஆனால், அன்னிய செலாவணி மற்றும் கடத்தல் மீறல்கள் தொடர்பான காபிபோசா சட்டம் நடிகை ரன்யா ராவ் மீது பாய்ந்துள்ளது. இதனால் அவர் ஓராண்டு சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் , நடிகை ரன்யா ராவ் மீது சட்டவிரோத தங்கக் கடத்தல் வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்ககம் நடத்திய விசாரணையில், ரன்யா ராவ் 127.3 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவுக்கு கொண்டு வந்தது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, ரூ.102.55 கோடி அபராதம் விதித்து, அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூவருக்கும் தலா ரூ.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் 2,500 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலத்திற்குள் அபராதம் செலுத்தப்படாவிட்டால், ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய காபிபோசா மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை செப்டம்பர் 11-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.