பாலியல் வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் சிங் மான் முதலமைச்சராக உள்ளார். இக்கட்சியின் சார்பில் கடந்த தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஹர்மித் சிங் பத்ன்மஜ்ரா. இவர் மீது ஜிரக்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் ஹர்மித் சிங் பத்ன்மஜ்ரா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர்.
இந்த நிலையில், விசாரணைக்காக ஹர்மிங் சிங்கை போலீஸார் வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது திடீரென ஹர்மித் சிங்கும், அவரது உதவியாளர்களும் போலீஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டு விட்டு காரில் தப்பிச் சென்றனர். அவரை போலீஸார்தேடி வருகின்றனர். போலீஸாரின் பிடியில் இருந்து ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஹர்மித் சிங் எஸ்கேப்பாகியுள்ளது பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.