‘பாஜகவின் சி டீம்தான் விஜய்’ – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் பாஜகவின் சி டீம் தான் என்று தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணியில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பத்து நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து உண்மையிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துச் சொல்கின்றோம்.

நாங்கள் தீய சக்தி இல்லை. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. தவெக தலைவர் விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும்.

அவரைப் பொறுத்தவரை எந்த காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்ஜிஆரையும் விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய்யால் எந்த காலத்திலும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். அவர், ஐநூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான் தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப்போல் நாங்கள் இல்லை. பாஜகவின் சி டீம்தான் விஜய்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *