மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்ய, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலை மீது உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் அல்ல என்றும், தர்ஹா அருகே இருப்பது சர்வே கல் என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், திருப்பரங்குன்றம் மலையின் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவின் சந்தனக்கூடு விழாவையொட்டி, காவல்துறை பாதுகாப்புடன் முஸ்லிம்கள் நேற்று கொடியேற்ற நிகழ்வை நடத்தினர். இதையடுத்து, தங்களையும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி 15-க்கும் மேற்பட்ட இந்துத்துவா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில்,திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்களின் செல்போன் எண், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுக் கொண்டு, தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், வீடியோ, போட்டோ எடுக்கவும் போலீஸார் தடைவிதித்துள்ளனர்.
