இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடி செலவில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. தூத்துக்குடியில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் பரப்பளவில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க கடந்த 2024 பிப்ரவரி 25-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். அதன்படி முதற்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கரில் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிடவை இடம்பெற்றுள்ளன.
இத்தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எஃப் – 7 மற்றும் வி.எஃப்-7 ஆகிய 2 வகை கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. இந்நிலையில் வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவருக்கு , அங்கு அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
வின்ஃபாஸ்ட் ஆலைக்குச் சென்று ஆலையை திறந்து வைத்த முதலமைச்சர், முதல் மின்சார கார் விற்பனையையும் தொடங்கி வைத்தார். மின்சார காரில் கையொப்பமிட்ட அவர், கனிமொழி எம்.பியுடன் சேர்ந்து அந்தக்காரில் பயணம் மேற்கொண்டார்.
வின்ஃபாஸ்ட் கார் ஆலையை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது முதலீட்டிற்காக தமிழ்நாட்டை தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்த பெருமையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பங்கு உண்டு.வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இந்தியாவின் மொத்த மின்சார கார்கள் உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தயாராகிறது. மின்சார கார்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஒப்பந்தம் போடப்பட்ட 17 மாதங்களில் ஆலையில் உற்பத்தி தொடங்கி உள்ளது.
எளிமையாக தொழில் தொடங்க உகந்த மாநிலம் என்பதற்கு இதுவே சான்று. இந்தியாவிலேயே தூத்துக்குடியில் தான் முழுமையான மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, கோவை, ஓசூரை தொடர்ந்து மோட்டார் வாகன தொழிற்கூடமாக தூத்துக்குடி உருவெடுக்கும். கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திலும் வின்ஃபாஸ்ட் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .