கரூர் சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், இச்சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவு பிறப்பித்தார். விசாரணையின் போது தவெக மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக, ”தவெக தலைவர் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய்யும், தவெக நிர்வாகிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல் தலைமறைவாகி விட்டனர். என்ன மாதிரியான கட்சி இது” என்று நீதிபதி செந்தில் குமார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
நீதிபதி செந்தில்குமாரின் கருத்தால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் அவரை தனிப்பட்ட முறையிலும், அவரின் குடும்ப பின்னணியை வைத்தும் விமர்சனம் செய்தனர். இது மட்டுமின்றி யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட சிலரும் நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதன்பேரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் நீதிபதியின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி செந்தில்குமார் குறித்து விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதாக ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வரதராஜன் என்பவரை சென்னை தெற்கு சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இவர் நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி நேற்று மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
