அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியை காப்பாற்றுவார்கள் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா மாநிலம் முழுவதும் திமுக, அதிமுக, தவெக உள்பட பல்வேறு கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணாசிலையில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். எனவே, மக்கள் மனநிலையை உணர்ந்து அதன்படி செயல்பட உறுதி ஏற்க வேண்டும். இந்த இயக்கத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர் உருவாக்கி தந்த சட்டவிதிகள் இன்று பின்பற்றப்படவில்லை. அந்த விதிகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.
அதிமுகவில் தலைவர்கள் விரைவில் இணையவில்லை என்றால் தொண்டர்கள் இணைந்து கட்சியைக் காப்பாற்றுவார்கள். நானும் செங்கோட்டையனும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் என்னுடன் பேசினார். அவரை நேரம் கிடைத்தால் சந்தித்துப் பேசுவேன்.அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை எதுவும் நடக்கலாம் என்றார்.