தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறைக்கான மாநில கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார். இவ்விழாவில் அவர் பேசுகையில், தமிழகத்திற்கு என்று தனி சிந்தனை உள்ளது, சிந்தித்து செயல்படும் வகையில் கல்வி திட்டம் உருவாக்கம். அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75 சதவீதமாக உள்ளது. 100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே இலக்கு.
சமத்துவ கல்வியை உருவாக்குவோம், அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம், பாகுபாட்டை நீக்குவோம். மனப்பாடம் செய்வதை விட சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம். படிப்பவர்களாக மட்டுமின்றி படைப்பாற்றல் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்கவுள்ளோம். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் கொள்கை. கல்வி அனைவருக்கும் பொதுவானது; அங்கு யாருக்கும் பாகுபாட்டுக்கே இடமில்லை. அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனைகள் கல்வியில் நுழைவதை அனுமதிக்க மாட்டோம். பிற்போக்கு சிந்தனை இல்லாமல் முற்போக்காகவும் பகுத்தறிவாகவும் கல்வி இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக்கொள்கைதான் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது என்றார்.