தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வைகை அணை 69 அடியை எட்டியது. இதன் காரணமாக மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டி துவங்கியதால் தேனி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மேகமலை வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரத்தில் அமைந்துள்ள வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஜூலை 26-ம் தேதியன்று 66 அடியை எட்டியது.
இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து நேற்று 68.50 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 69 அடியை எட்டியதால் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வழக்கமாக வைகை யின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரிநீர் திறக்கும் சூழலில் நடப்பாண்டில் முழக்கொள்ளவான 71 அடிக்கு தண்ணீர் தேக்க நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
ஆயினும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் நீர்வரத்திற்கேற்ப வைகையில் இருந்து உபரிநீர் வெளியேற்றக்கூடும் என்பதால் கரையோரப் பகுதி மக்கள், விவசாயிகள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து 1,726 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக குழாய், கால்வாய் வழியாக 569 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.