உத்தரகாண்ட்டில் பெய்த கனமழையால் மேக வெடிப்பு ஏற்பட்டு, பெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஹர்சில்-தாராலி பகுதியில், இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கீர்கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து உள்ளூர் காவல்துறை, எஸ்டிஆர்எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வெள்ளத்தால் ஒரு கிராமமே அடித்துச் செல்வது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.