பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு விரைவில் தடைவிதிக்க வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 5-ம் தேதி முதல் பிக் பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரை, இணையதள பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சிக்கு எதிராக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
இதன் பின் சென்னை தலைமை செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், , “விஜய் டி.வியில் தமிழர்களின் பண்பாட்டை கெடுக்கும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த தமிழ் சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, வருமானம் ஒன்றுதான் என்ற நோக்கத்தில் ஸ்கிப் ரைட்டர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மனைவி, பிள்ளைகள், தாய் தந்தையுடன் பார்க்க முடியாத அருவருக்கக்கூடிய காட்சிகள் அதில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த அசிங்கமான நிகழ்ச்சியை ஒளிப்பரப்பி தான் விஜய் டிவி பணம் சம்பாதிக்க வேண்டுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஜனநாயக ரீதியாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறேன். சட்டமன்றத்தில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளேன். 2 நாட்களுக்கு முன்பு முதல்வருக்கும் இது தொடர்பாக அறிக்கை அனுப்பியிருந்தேன். ஆனால், இரண்டு நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும். கர்நாடகா, கேரளா போலத் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் பிக்பாஸ் அரங்கத்திற்குள் நுழைவோம், விஜய் டி.வியை முற்றுகையிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
