பிரிட்டனில் 1960-களில் நடந்த ஒரு துணிச்சலான ரயில் கொள்ளை, அதில் திருடப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஏப்ரல் 1964-இல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டபோது, இதுபோன்ற குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற செய்தியைச் சொல்வதில் நீதிபதி உறுதியாக இருந்தார். அதிலிருந்து பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றவாளிகளில் பலர் பிபிசியிடம் பேசினர்.
ஏப்ரல் 16, 1964 அன்று, அந்த மோசமான கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அய்ல்ஸ்பரி கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 12 பேரில் ராபர்ட் வெல்ச்சும் ஒருவர்.
பதினான்கு ஆண்டுகள் கழித்து, 1978 இல், அவர் பிபிசியின் மேன் அலைவ் (Man Alive) என்ற ஆவணப்பட நிகழ்ச்சியில் பங்கேற்றார். உள்ளூர் பிரமுகர்கள் தன்னுடைய தண்டனை அறிவிப்பை கேட்க நீதிமன்ற அறையில் இருக்கைகளுக்கு முட்டி மோதியதை அவர் நினைவு கூர்ந்தார்.
“அவர்கள் அனைவரும் பார்க்க வந்தது, அந்த வழக்கின் கிளைமாக்ஸ் காட்சியை,” என வெல்ச் கூறினார்.
பிரிட்டன் அதுவரை கண்டிராத மிகவும் துணிச்சலான திருட்டுகளில் ஒன்றான கிரேட் ரயில் கொள்ளையில் (The Great Train Robbery) ஈடுபட்ட பிறகு, வெல்ச் அவரது கூட்டாளிகளுக்கு கருணை காட்டக்கூடாது என்பதில் சட்டம் உறுதியாக இருந்தது.