மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கனூரணி பகுதியிலுள்ள சமூகநீதி விடுதியில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான 3 மாணவர்களும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிக்கிய மாணவர்களை விடுவிப்பதற்காக செக்கானூரணி பெண் ஆய்வாளர், சாதாரண வழக்காக மட்டும் பதிவு செய்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நிர்வாணமாக தாக்கிய கொடூரம்:-
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி பகுதியில் ‘சமூகநீதி’ விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தச் சமூகநீதி விடுதியில் பள்ளி மாணவர்களும், அரசுக் கல்லூரி மாணவர்களும், அரசு ஐடிஐ கல்லூரி மாணவர்களும் தங்கிப் படித்து வருகிறார்கள்.
இந்த விடுதியில் தங்கிப் படித்து வரும் ஐடிஐ மாணவர் ஒருவரை நிர்வாணப்படுத்தி சில மாணவர்கள் தாக்கி, தகாத வார்த்தைகளில் திட்டி, ராக்கிங் போன்ற பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யபட்டதுடன், வேகமாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தலைவர்கள் கண்டனம்:-
“சமூகநீதி விடுதி” யில் மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் 3 மாணவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.
பெண் காவல் ஆய்வாளரின் ‘கட்டப் பஞ்சாயத்து’
அந்த மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு பள்ளிக்கு செல்லும், முன் செக்கானூரணி காவல் ஆய்வாளர் திலகராணி முன்னணியில் வழக்கு தொடர்பாக ‘கட்டப் பஞ்சாயத்து’ நடந்ததாகவும், இதில் பட்டாசு வியாபாரி ஒருவர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி விரிவாக குறிப்பிடாமல், ராக்கிங் வழக்காக, மட்டும் பதிவு செய்து, அதாவது சின்ன வழக்காக மட்டும் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால், சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்காக செக்கானூரணி காவல் ஆய்வாளர் திலகராணிக்கு ஒரு கணிசமான பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோவத்தில் மாவட்ட ஆட்சியர்:
இதுகுறித்து, ஏதும் அறியாத மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ஐஏஎஸ், நேற்று குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களை பார்த்து விசாரிக்க ‘மதுரை சிறுவர் சீர்திருத்த கூர்நோக்கு பள்ளி’க்கு சென்றுள்ளார். அங்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ச்சி ஆகியுள்ளார். மேலும், மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி விடுவித்த பெண் நீதிபதியும் அங்கு இல்லாததால் கடுப்பான ஆட்சியர் அங்குள்ள அதிகாரிகளை திட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசாரிங்க சார்..!
தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்கை ஒரு சின்ன வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணை நடத்திய, மதுரை செக்கானூரணி பெண் காவல் ஆய்வாளர் திலகராணி செய்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தும்படி, மாவட்ட ஆட்சியர் மதுரை மாவட்ட எஸ்பி-யிடம் வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையில் காவல் ஆய்வாளர் திலகராணி பணம் வாங்கிக் கொண்டு வழக்கை மாற்றி எழுதி இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.