தகாத உறவுக்கு இடையூறு- 3 வயது மகளை ஏரியில் வீசி கொலை செய்த தாய்!

ராஜஸ்தானில் தனது தகாத உறவுக்கு இடையூறாக இருப்பதாக மூன்று வயது மகளை ஏரியில் வீசி கொடூரமான முறையில் கொலை செய்த தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியைச் சேர்ந்தவர் அஞ்சலி(28). இவர் கணவரை விட்டுப் பிரிந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீரில் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. அஜ்மீரில் உள்ள ஒரு ஓட்டலில் அஞ்சலி வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். அதே ஓட்டலில் வேலை செய்து வந்த அல்கேஷ் என்பவருடன் அஞ்சலிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இரவு ரோந்து பணியில் இருந்து தலைமைக்காவலர் கோவிந்த் சர்மா, சாலையில்  அஞ்சலி மற்றும் அல்கேஷை பார்த்து இந்த நேரத்தில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். தனது மகளுடன் வெளியே வந்த போது காணவில்லை என்று அஞ்சலி கூறியுள்ளார். இரவு முழுவதும் தேடியும் தனது மூன்று வயது மகளைக் காணவில்லை என்று கூறியுள்ளார்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவிகளை காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அஞ்சலி தனது மகளின் கரங்களைப் பிடித்துக் கொண்டு அனாசாகர் ஏரி பகுதிக்குச் சென்றுள்ளார். சில மணி நேரம் கழித்து அஞ்சலி செல்போனில் பேசியவாறு தனியாக வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை ஏரியில் குழந்தையின் உடலை போலீஸார் கண்டெடுத்தனர்.

இதையடுத்து அஞ்சலியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, தனது 3 வயது குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தனது குழந்தையை அல்கேஷீக்கு பிடிக்காததால் அவரை ஏரியில் வீசி கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து அஞ்சலியை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலையில் அல்கேஷீக்கு தொடர்பு இருக்கிறதா என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முறை தவறிய பழக்கத்திற்காக பெற்ற குழந்தையை ஏரியில் வீசி தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *