இது போல ஒருவரை நான் பார்த்ததில்லை- விஜய்யை சாடிய கனிமொழி எம்.பி

ஒரு தலைவர் ஆறுதல் கூட சொல்லாமல் தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைத்து அங்கிருந்து சென்றது இதுவரை நான் பார்த்ததே இல்லை என்று தவெக தலைவர் விஜய்யை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு உடனடியாக நின்றது திமுக மற்றும் தமிழக அரசு தான். மக்களின் உயிர் மற்றும் ஆறுதல்தான் முக்கியமான விஷயம். அடிப்படையில் எல்லோரும் மனிதர்களாக செயல்பட வேண்டும். விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்.

யார் மீது தவறுகள் இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் தெளிவாகச் சொல்லியுள்ளார். இப்படிப்பட்ட நேரத்தில் பழி சுமத்துவது தேவையில்லாத ஒன்று. தவறான ஒன்று. அந்த நேரத்தில் மக்களோடு மக்களாக நிற்க வேண்டும்.

அந்த நேரத்தில் ஒரு தலைவர், ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் தன்னுடைய பாதுகாப்பை மட்டுமே நினைத்து அங்கிருந்து சென்றது இதுவரை நான் பார்த்ததே இல்லை. மக்கள் பாதுகாப்பை பற்றித்தான் யோசிக்க வேண்டும். அவர் செல்ல முடியாவிட்டாலும், அடுத்த கட்டத் தலைவர்களை அனுப்பியிருக்க வேண்டும். நான் செல்கின்ற போதும் கூடு அந்த கட்சியைச் சார்ந்த தலைவர்கள் இல்லை என்று பார்க்கும் போது மனிதாபிமானமே இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. மற்ற தலைவர்கள் மக்களோடு நின்று உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், புரட்சி வெடிக்க வேண்டும் என தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட பதிவு உச்சகட்டப் பொறுப்பின்மை. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பொறுப்புடன் நடந்துகொண்டு, அமைதியை பேண வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *