மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்?: தவெகவுக்கு கிடுக்கிபிடி போட்ட நீதிபதி!

விஜய் ஒரு டாப் ஸ்டார். அவரைப் பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு சரியான இடத்தை கேட்டிருக்க வேண்டும் என்று நீதிபதி பரத்குமார் என்று கூறியுள்ளார்.

தவெக தலைவர் நடிகர் விஜய், கடந்த 27-ம் தேதி கரூரில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது.  இந்த நிலையில் கரூர் மாவட்ட தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீஸார், அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது அரசு தரப்பில் வாதிடுகையில், ‘கரூர் பிரச்சாரக் கூட்டத்தின் போது காவல்துறையினர் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றினர். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தினர் அதை பின்பற்றவில்லை. இச்சம்பவத்தில் சிக்கி கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் மேலும் சிலர் கவலைக்கிடமாக உளளனர். சிலர் இறக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. எனவே இந்த வழக்கில் மேலும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்கெனவே அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அங்கு அனுமதியளிக்கப்படவில்லை. அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது.

வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்யும் போது அதற்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருப்தி தெரிவித்தார். ஆனால்,அவர்கள் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை. இதனால் வேகமாக வரச்சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் ராங் ரூட்டில் வந்தனர். கரூர் மேம்பாலத்தில் இருந்து வரும் போது வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தார்.

அந்த சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். அதற்குள் செல்லாமல் விஜய்யை மக்கள் பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும். கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு காரணமாகும். பிரச்சாரம் நடைபெற்ற 50 மீட்டருக்கு முன்னதாக பிரச்சார பேருந்தை நிறுத்த வேண்டும் என்று சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. விஜய் பிரச்சாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரச்சாரம் நடந்தபோது அதிக வாகனங்கள் வந்தன. அதிக வாகனங்கள் வந்ததால் அந்த இடத்தை விஜய் பிரச்சாரத்துக்கு வழங்கினோம்’ என்றும் தெரிவிக்கப்பட்டது

தவெக தரப்பில் வாதிடுகையில், “காவல்துறையினர் எங்களது மனுக்களை ஒவ்வொன்றாக நிராகரித்தனர். கட்சி தொண்டர்களை நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால், பொதுமக்களைக் கட்டுப்படுத்த வேண்டியது காவல்துறைதான். காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம். விஜய் பிரச்சார கூட்டத்துக்கு வந்தவர்கள் எல்லாம் தானாக வந்த கூட்டம் தான். யாரையும் வண்டியை வைத்து அழைத்து வரவில்லை.

விஜய் பரப்புரைக்கு பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி, லைட் ஹவுஸ் பகுதி, உழவர் சந்தை பகுதியை கேட்டிருந்தோம். அதாவது லைட் ஹவுஸ் பகுதியில் பேசிவிட்டு உழவர் சந்தை வழியாக சென்றால் 1 லட்சம் பேர் வரை வந்திருந்தாலும், கூட்டம் தானாக கலைந்து சென்றிருக்கும். ஆனால், அங்கு அனுமதி வழங்கவில்லை. 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று அனுமதி கேட்டோம்.

ஜெனரேட்டர் இருக்கும் பகுதியில் நிறுத்த வேண்டும் என்பதால் அந்த பகுதியில் சென்று வாகனத்தை நிறுத்தினோம். விசாரணை ஆணையத்தின் அறிக்கை வரும் வரை யாரையும் கைது செய்யக் கூடாது.’ என வாதிடப்பட்டது.

இதையடுத்து மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என்று தவெக தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி பரத்குமார், ‘விஜய் ஒரு டாப் ஸ்டார். அவரைப் பார்க்க குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்கு சரியான இடத்தை கேட்டிருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை பார்க்க வருவது கட்சிக் கூட்டம். ஆனால், விஜய்க்கு 10,000 பேர் மட்டும் தான் வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? பிரச்சாரம் என்றாலும் மாநாடு போலத்தான் மக்கள் வருவார்கள். அவரை முதல்வரோடோ அல்லது மற்ற கட்சித் தலைவர்களோடோ ஒப்பிட முடியாது. நீங்கள் சொன்ன மூன்று இடமும் போதுமானது கிடையாது.

காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும் மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா? கூட்டம் அளவு கடந்து சென்ற போதும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு, தவெக சார்பில், சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் கூட்ட நெரிசல் அதிகம் வராது என்று நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகளை அக்டோபர் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி பரத்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *