புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு மர்மநபர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க சிலர் வந்திருந்தனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியும் வந்திருந்தார். அப்போது டிஜிபி அலுவலக வாசலில் நின்ற நான்கு பேர் கொண்ட கும்பல், திடீரென ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கியது. அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக ஏர்போர்ட் மூர்த்தி கருத்துகளைத் தெரிவித்து வந்ததாகவும், அதனால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சென்னை டிஜிபி அலுவலகத்தின் வாயிலில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தியின் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டித்துள்ளனர்.