சவுதி அரேபியாவில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் மதீனாவிற்கு உம்ரா புனித பயணம் சென்ற பேருந்து முப்ரிஹத் பகுதி அருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தெலங்கானா, ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப்பதிவில், “மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
