கனமழையால் கலங்கும் கேரளா- இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் இன்று திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரபல சுற்றுல தலங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் இன்று 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 11 முதல் 20 செ.மீ. மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு 6 முதல் 11 செ.மீ மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருவதால், பல சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மாவட்டத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி மற்றும் வாழச்சல் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வியாழக்கிழமை வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா முழுவதும் கனமழை தொடரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *