கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்- மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் புகார்

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்

‘மெஹந்தி சர்க்கஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் படத்திலும் நடித்தார். அதன் பின் பெரிய திரைகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே தனியார் தொலைக்காட்சி நடத்தும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று புகழ் பெற்றார். இதன் பின் தனது கேட்டரிங் சர்வீஸ் மூலம் பிரபல திரை நட்சத்திரங்களின் திருமணம், முன்னணி படவிழாக்களில் சமையல் செய்து அசத்தி வருகிறார்.

இவரை ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக மாதம்பட்டி ரங்கராஜுக்கும், ஸ்ருதிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, கடந்த மாதம் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாக மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

மேலும் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இவர் இவர் ஏற்கெனவே ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ பட இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக்கை திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்பு மாதம்பட்டி ரங்கராஜை கரம் பிடித்தார்.

இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ரங்கராஜ் எனது கணவர். எம்.ஆர்.சி. நகர் கோயிலில் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர் என்னை விட்டு விலகி விட்டார். என்னிடம் தொடர்பை முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்றபோது, இரண்டு முறையும் என்னை அடித்து விரட்டியுள்ளார். தொடர்ந்து அவருடன் பேச முயன்றும், அவருடைய நண்பர்கள் என்னைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர்.

இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நானும் ரங்கராஜும் இணைந்து வாழ்ந்தது உண்மை. ஆனால், இப்போது என்னை விட்டு விலகியுள்ளார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும்” என புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *