வங்கக் கடலில் உருவாக உள்ள மொந்தா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் ஆயத்த நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காரணமாக அக்டோபர் 1-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 21.08 செ.மீ. மழை பெய்துள்ளது இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மழை பாதிப்புகளால் 485 கால்நடைகள் பலியாகியுள்ளன. 420 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. அது முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும்.
தமிழக அரசு புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண முகாம்கள் அனைத்தும் இந்த ஆண்டும் தயார் நிலையில் உள்ளன. தற்போது 2 முகாம்களில் 210 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாக உள்ள மொந்தா புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. ஆந்திராவை நோக்கி புயல் காரணமாக சென்னை, அதை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.
