அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பதவி பறிப்பு – பின்னணி!
- அவர் கூறியதாவது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் அல்ல, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள்.
- பொதுக்குழு முடிவை மீறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களோடு இணைந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
- இயக்கத்திற்கு துரோகம் செய்தால் இப்படிப்பட்ட நிலைமைதான் வரும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். சட்ட விதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
- எப்போது பார்த்தாலும் ஜெயலலிதாவின் விசுவாசி என்கிறார். அப்படி இருந்தால் ஏன் இவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார், மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்தார்.
- நான் முதலமைச்சர் ஆனதும்தான் இவரை அமைச்சரவையில் இணைத்தேன். மா.செ. பதவியையும் வழங்கினேன்.

கூவத்தூர் விடுதியில் நடந்தது என்ன?
- நான் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளரா? நிரந்தர பொதுச்செயலாளரா? என்பதை நாடறியும்.
- கூவத்தூரில் செங்கோட்டையனை முதல்வராக்க பேச்சு நடக்கவில்லை, என்னைத்தான் எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.
- ஜெயலலிதா இருந்தபோது 10 ஆண்டுகாலம் வனவாசம் போனவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட அவருக்கு அதிமுக பற்றி பேச தகுதி கிடையாது.
- அதிமுக தலைமை அலுவலகத்தை உடைத்தவர் ஓபிஎஸ். அவரை எப்படி இணைத்துக்கொள்ள முடியும்?
என்று அவர் தரப்பு விளக்கத்தை எடப்பாடி பழனிசாமி அளித்துள்ளார். மற்றொரு பக்கம் “கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்…” என்று செங்கோட்டையன் தரப்பில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பிளவுப்பட்டுள்ள அதிமுக மேலும் பிளவுப்பட்டுள்ளதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பலவீனமான கட்சியாக தேர்தலில் போட்டியிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
