மதுரை மாநகர் முழுவதும் மாநகராட்சி சார்பில், ஆங்காங்கே உரியமுறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைகள் தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றியுள்ளதால், மதுரை மாநகரமே! குப்பை நகராமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பைத் தொட்டிகளை காணோம்!
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு 100 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், ஒவ்வொரு இடத்தில் ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.
இதனால், அந்தந்த பகுதி மக்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை போட்டு வந்தார்கள். இதனால் ஆங்காங்கே குப்பைகளை வீசி எறிவதோ! தெருக்களில் ஏதோ ஒரு இடத்தில் குப்பைகளை குவியலாக போடுவதோ! வெகுவாக குறைந்து வந்தது.
ஆனால் ஒரு சில மாதங்களாக, மதுரை மாநகராட்சியின் பல இடங்களில், இந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் மட்டும் குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் வைத்திருக்கிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ஒரே இடத்தில வைத்தால் எப்படி?
குறிப்பாக, பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளான ஜெய்ஹிந்த்புரம், மெஜூரா காலேஜ் பகுதி, டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர், ஜீவா நகர், என அங்கு வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, “குப்பை தொட்டிகளை ஆங்காங்கே வைத்தால் தெருகள் அசிங்கமாக இருப்பதாகவும் அதற்கு பதிலாக கோவலன் பொட்டல், அதாவது பழங்காநத்தம் சுரங்கப்பாதைக்கு அருகில் மட்டும் குப்பை தொட்டிகளை வைத்து மொத்தமாக அப்புறப்படுத்தப்படுவதாக” சொல்கிறார்கள்.
சுகாதார சீர்கேடு:-
இதனால் பொதுமக்களும், அந்த பகுதி வழியாக செல்பவர்களும் குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டும், கொட்டி விட்டும் செல்கிறார்கள். இதனால் பெரும் அளவு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்று பரவ அதிக அளவில் வாய்ப்புள்ளது என்பதை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புலம்பும் தூய்மை பணியாளர்கள் :-
குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்டிருக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, தூய்மை பணியாளர்கள், “தங்களுக்கு தான் வேலை அதிகம்” என புலம்புகிறார்கள்…”.
இதுகுறித்து மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் கூறியதாவது, “முன்பெல்லாம் ஓர் ஏரியாவில் ஒவ்வொரு பெரிய சைஸ் குப்பைத்தொட்டி மாநகராட்சி சார்பில் வச்சிருப்பாங்க. அதுல அந்த பகுதி மக்கள் வந்து குப்பைகளை போடுவாங்க. அப்படி கீழ குப்பைகள் சிதறினாலும், குப்பை தொட்டிக்கு பக்கத்தில் தான் குப்பைகள் இருக்கும். எங்களுக்கும் குப்பைகளை எடுத்து செல்வது ஈசி ஆக இருந்துச்சு..!
ஆனா, இப்போ குப்பைத்தொட்டிகளை எடுத்ததுனால மக்கள் எல்லாரும் குப்பைகளை ஆங்காங்கே போட்டுட்டு, கீழ வீசிட்டு போறாங்க… எங்களுக்கு அந்தக் குப்பைகளை அகற்றுவது ரொம்ப சிரமமா இருக்கு. ஒரு மின்கம்பம் இல்ல டிரான்ஸ்பாரம் இருந்தா, அத சுத்தி ஏகப்பட்ட குப்பைகள் இருக்கும்…!” என்று புலம்புகிறார்கள்.

ஆணையர் சித்ரா விஜயன் நடவடிக்கை எடுப்பாரா..?
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்து, அதை உரியமுறையில் பராமரித்தால் மட்டுமே ‘மதுரை மாநகரம் குப்பை நகரமாக மாறுவதை தவிர்க்க முடியும்’.
எனவே, இந்த விவகாரத்தை கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், தூய்மை பணியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே, இந்தியாவின் தூய்மையற்ற நகரங்களின் பட்டியலில் மதுரை மாநகரம் முதல் இடம் பிடித்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும்; மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் அவமானத்தை தேடித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
