‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (டிசம்பர் 3) காலை 5.30 மணி அளவில், வடதமிழக – புதுச்சேரி கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி,கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை (டிசம்பர் 4) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
