அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏமான கோவை சின்னசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார்.
ஐஎன்டியுசி தொழிற்சங்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கோவை சின்னச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதன் பின் 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கார்த்திக்கிடம் கோவை சின்னச்சாமி தோல்வியடைந்தார்.
அதிமுக தொழிற்சங்க பேரவை செயலாளராக கோவை சின்னச்சாமி இருந்தபோது ரூ.8 கோடியை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கோவையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். பின்னர் அவர் டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தார். இதன் பின் கடந்த 2024 பிப்ரவரியில் பாஜகவில் இணைந்தவர் சில மாதங்களில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கோவை சின்னச்சாமி இணைந்தார். அப்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். தற்போது அதிமுகவில் இருந்து கோவை சின்னச்சாமி திமுகவில் இணைந்துள்ளார்.
