பாட்டாளி மக்கள் கட்சியின் மாழ்பழ சின்னம் முடக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பதவிக்கு நடக்கும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் காரணமாக டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாமக இரண்டு குழுக்களாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், 2026 ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் தரப்புக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளனர். தரவுகள் உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், கட்சித் தலைவர் பதவி குறித்த தனது முரண்பாடுகளை தீர்க்க டாக்டர் ராமதாஸ் நீதிமன்றத்தை அணுக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில், பாமகவை அன்புமணி அபகரித்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, “தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்னை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் ஏ மற்றும் படிவம் பி-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து டாக்டர் ராமதாஸ் தரப்பு இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
