திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அருகே உள்ள தீபத்தூணில் கார்த்திகைதீபம் ஏற்ற உயர்நீதிமன்ற கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பு படி தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 2 நாட்களாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கை டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பக்கத்தில் இன்று (டிசம்பர் 5) வெளியிட்டுள்ள பதிவில், ” மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது. பொதுஅமைதிக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்தப் புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது. அன்பே சிவம், அறிவே பலம்” என்று கூறியுள்ளார்.
