தனிக்கட்சி தொடங்குவதாக ஒருபோதும் சொல்லவே இல்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர் எம்எல்ஏக்களுடன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமை குழு ஆலோசனைக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். டிசம்பர் 15-ம் தேதி இறுதி முடிவு எடுக்கப் போகிறோம் என்று கூறியிருந்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில், அதிமுகவில் மீண்டும் தன்னை இணைப்பது தொடர்பாக முடிவு எக்கப்படாலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். ஆனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்ததால் செங்கோட்டையன் நீக்கப்பட்டார் என்று அறிவித்துள்ளார். நீக்கியவருடன் பேசியவரை கட்சியில் இருந்து கட்டம் கட்டிய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்டாயம் அதிமுகவில் சேர்க்கமாட்டார் என்று அதிமுகவினர் அறுதியிட்டுச் செல்கின்றனர். அப்படி நடந்தால் தனது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற நினைப்பில் டிசம்பர் 15-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் திடீரென சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் நோக்கம். தனிக்கட்சி தொடங்குவதாக நான் எப்போதும் சொல்லவே இல்லை என கூறினார்.
