சென்னை சங்கமம் – ‘நம்ம ஊர் திருவிழா’ : தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தின் பாரம்பரிய கலைகள் மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ 2026-ஆம் ஆண்டு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

​தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மக்களின் கொண்டாட்டங்களை ஒட்டி இந்த விலா கொண்டாடப்படுகிறது.

தொடக்க விழா சிறப்பம்சங்கள்

​சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, பறை இசை கொட்டி, இந்த கலைத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

பங்கேற்பாளர்கள்:

இவ்விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, சாமிநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பாரம்பரிய கலைஞர்கள் என பலர் பங்கேற்றனர்.

சிறப்பு கலை நிகழ்ச்சிகள்

தொடக்க விழாவில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து வழங்கிய பிரம்மாண்ட இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.

நிகழ்ச்சி நிரல் மற்றும் இடங்கள்

​ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்களுக்குச் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

​மொத்தம் 20 இடங்கள்:

மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, செம்மொழிப் பூங்கா என சென்னையில் மொத்தம் 20 இடங்களில் ‘சென்னை சங்கமம்’ விழா நடைபெறகிறது.

​கலைஞர்களின் சங்கமம்:

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,500-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். பழங்காலத் தமிழர்களின் வீரத்தையும் அழகியலையும் பிரதிபலிக்கும் 50-க்கும் மேற்பட்ட கலை வடிவங்கள் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், தேவராட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் (புரவியாட்டம்). இசை மற்றும் கூத்து: வில்லுப்பாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பம்பையாட்டம், துடும்பாட்டம். வீரக் கலைகள்: சிலம்பாட்டம், மல்லர் கம்பம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சியில் இவ்விழாவில் இடம்பெற்றுள்ளன.

முதல்வரின் வேண்டுகோள்

​விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும். நமது மண்ணின் மரபார்ந்த கலைகளை மீட்டெடுப்பதும், கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதுமே இந்த விழாவின் நோக்கம்” என்று குறிப்பிட்டார். மேலும், சென்னை மக்கள் குடும்பத்துடன் வந்து இந்த நாட்டுப்புறக் கலைகளைக் கண்டு மகிழுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *